கட்டுரை

பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!

50views
முனைவர் என்.பத்ரி

கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், “உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை” என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார், “இன்னும் மனைவியைச் சமமாகப் பாவித்துப் பொது இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடையே ஏற்படவில்லை’’என்று கூறினாராம். பாரதியாரின் பதிலைக் கேட்ட நிவேதிதாதேவி மிகுந்த கோபம் கொண்டு, “பெண்களுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால், சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும்?” என்று உபதேசம் செய்தாராம். இந்த நிகழ்ச்சியே பெண்ணுக்கு தேவையான சமஉரிமைப் பற்றிய சிந்தனை பாரதியார் மனதில் உருவாகக் காரணமாயிற்று..

வங்கப் பெண்மணிகள் சுதேசிய இயக்கத்தில் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு வியப்புற்றார் பாரதி. தமிழ்ப் பெண்களும் அவற்றையறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பலப் பத்திரிகைகளில் பெண்ணியக் கருத்துக்களை ஊக்கப்படுத்தி எழுதத் தொடங்கினார்.

“துருக்கி நாட்டில் நடந்த விடுதலைக் கிளர்ச்சி, தென் ஆப்பிரிக்காவில் ‘பியேட்டர் மாரிஸ்பர்க் பட்டணத்தில் 1910-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பெண்கள் விடுதலைச் சங்கம்,’ பிருத்தானியா, ‘ஸ்திரி சாம்ராஜ்யம்’ ஆகிய பெண்ணுரிமை இயக்கங்களை தமிழ் நாட்டுப் பெண்களுக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். எல்லா நாடுகளிலும் பெண்கள் சுதந்திரம் பெற்று மனித இனத்தை மேன்மைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் தமிழ்ப்பெண்களும் இதைத் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆசியாவில் பெண்விடுதலைக்காகப் போராடிய சீனநாட்டு சியூசீன் என்ற பெண்ணைப் புகழ்ந்து அப்பெண் இயற்றிய பெண்ணுரிமை இயக்கப் பாடலைத் தமிழாக்கம் செய்தார். புதுச்சேரியில் கூடிய மகளிர் கூட்டத்தில் தம் மகள் சகுந்தலா பாரதியைக் கொண்டு அந்தப் பாடலைப் பாடச் செய்தாராம். அப்பாடலில்,

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ?    என பெண்களை பெருமை.படுத்தியுள்ளார்.

பாரதியின் ‘பெண் விடுதலைக் கட்சிக்குச் சதாசிவ அய்யர் என்ற நீதிபதியின் மனைவி மங்களாம்பிகை, அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி போன்றோர் துணை நின்றது குறிப்பிடத்தக்கது. பெண் விடுதலை இயக்கத்தை நாட்டு விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பாரதியார் பார்த்து வந்தார்.பெண் வயதுக்கு வரும் முன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது, அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை அவள் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தக் கூடாது,அவர்களுக்குச் சொத்தில் பாகம் கொடுத்தல், கணவனின் இறப்புக்குப் பின்பு அவளை மறுவிவாகம் செய்துக் கொள்ள அனுமதித்தல், விவாகம் செய்யாமல் கைத்தொழில் ஒன்றை செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ அனுமதித்தல்,அவர்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளித்தல், அவர்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளித்தல், அவர்கள் நகை, ஆடை போன்ற வீண் ஆடம்பரங்களை விட்டுவிட ஆர்வம் காட்டுதல், அவர்களுக்கு ஆணாதிக்கத்தை எதிர்க்கும் மன உறுதியை அளித்தல் போன்றவற்றை பாரதி தம் படைப்புகள் மூலம் ஊக்கப்படுத்தினார். வேல்ஸ் இளவரசியின் எளிமையைப் பாராட்டி அதை தமிழகப் பெண்கள் பின்பற்ற ஊக்கமூட்டினார்.

பெண்கள் புதுமைப் பெண்களாக சமத்துவ, தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும் என அவர் கனவு கண்டார். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாடிய பாரதி, ஆண்களுக்கு நிகரான சமூக, அரசியல் உரிமைகளும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.பெண்கள் ’நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டவர்களாக மாற வேண்டும்’ என்றார். “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது” என்று முழங்கிய பாரதி, பெண் விடுதலையே சமூகத்தின் உண்மையான வளர்ச்சி என நம்பினார்.

மகாகவி பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ஞானச் செருக்கும் பெண்ணிற்குத் தேவை என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே உரைத்தவர். பெண்ணின் வாழ்வு சிறக்க சமூகம் சிறக்கும் என்றும், சமூக முன்னேற்றத்தின் முதுகெலும்பு அவர்களே என உரைத்த பாரதியாரின் விசாலப் பார்வை இன்றும் நம்மை வழிநடத்துகிறது.ஆனால் இன்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் (POCSO) அதிகமாக பதிவாகி வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இன்றும்,கல்வி கற்ற பல பெண்களுக்கு, அவர்களது தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் தொடர்கின்றன. அரசு பெண்கள் நலம் சார்ந்த அறிவிப்புகளான அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம், திருமண உதவித் திட்டம்,ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகை உதவி போன்றவற்றை பெண்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், இந்தியாவிலேயே பெண் பணியாளர்கள் அதிகம் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பது குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில், இந்தியாவில் உற்பத்தித் துறையில் 43% பெண்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தொழிற்சாலைகளில் சுமார் 6.79 லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனர். 1.88 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.மாநில திட்ட ஆணையத்தின் தகவல்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்களிப்பு 64% ஆகவும், நகரங்களில் 55.4% பெண்கள் வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளிலும் உள்ளனர்.

20முதல்24 வயதுவரையிலான பெண்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்தவர்கள் 12.8%ஆகும். ஊதியத்துடன் வேலை செய்யும் பெண்கள் 40.8%ஆகும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 92.2%ஆகும். கல்வியறிவு பெற்றவர்கள் 84%ஆகும்.

தமிழ்நாட்டில் பெண்கள் நலன்களுக்காக நடப்பில் உள்ள பல சிறப்பு திட்டங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் போன்ற இத்திட்டங்களை பெண்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் அவர்கள் வாழ்வில் விரைவாக பொருளாதார தற்சார்பினை பெற முடியும்.சமூகத்திலும்,வீட்டிலும் உள்ள ஆண்களும் இதில் தங்களின் ஆதரவைஅளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.இதை ஆண்கள் தங்களின் தார்மீகக் கடமையாக உணர்ந்து செயல்படுவது நல்லது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!