“தற்கொலை”- மனம் சுமக்கும் ரணங்கள்..
வாழ்க்கையில் சிக்கல்களும், இடர்களும் பொங்கி பிராவகமெடுக்கும் கடினமான காலகட்டங்களில், மனித மனம் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதிலிருந்து விலகி தப்பித்துஓடி ‘தற்கொலை’ எனும் தவறான பாதையில் புதிரான பயணத்தை துவங்கிவிடுவது மனித வாழ்வின் வரமல்ல சாபம். அரிதாய் கிடைத்த மானிட வாழ்க்கையை அவசரப்பட்டு அரைகுறையாய் முடித்துக் கொள்வது என்பதெல்லாம் ஆறாவது அறிவுக்கு அவமானம்.
உண்மையில் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க விரும்பும் மனித மனம், தற்காப்பு கருவியாய் தற்கொலையை ஏற்றுக்கொள்ளும் எனில் நாம் தவறான திசையில் பயணிக்கிறோம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆகிவிடும். ஆனாலும் ‘கோழை, கையாலாகாதவன், வாழ்வின் சிக்கல்களிலிருந்து தப்பித்து ஓட விரும்புபவன்’ என்ற வெகுஜன பார்வையிலிருந்து நாம் முற்றிலும் விலகி, இவர்களை வேறு ஒரு சமதள கோணத்திலிருந்து அணுகி அரவணைத்து ஆற்றுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மனிதனின் ‘வெளியில் சொல்ல முடியாத வேதனைகளும், சொல்லுக்குள் அடக்கிவிட முடியாத சோகங்களும்’ அவனை விடாது துரத்தும் வெறிகொண்ட வேட்டை நாயாகும்போது; தப்பித்து ஓடும் மனிதன் தடுமாறி விழுந்த இடம், தடம்மாறி வாழ்வை கடந்த இடம் ‘தற்கொலை’ என்றாகி விடுகிறது. இங்கு பொதுவெளியில் புன்னகைத்துவிட்டு; எரிமலைக்குள் இதயத்தை வைத்து வெந்து மடியும், வாழ்வில் நொந்து குமுறும் மனிதர்கள் ஏராளம் உண்டு.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் நிகழும் ‘அகமன போராட்டங்களும், புறவெளி பிரச்சினைகளும்’ இணைந்து சப்தமில்லாமல் அவனுக்குள் நொடிக்கு நொடி தீராத யுத்தங்களை உள்ளுக்குள் சப்தமில்லாமல் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இயந்திர கதியாகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு மனித உயிருக்குள்ளும் ஓராயிரம் பிரச்சினைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதன் பிணமாகத்தான் இருக்க முடியும் என்கிற எதார்த்த நிலைமை இன்று.
வாய்ப்பு கிடைக்கும்போது வல்லூறாய் அவதாரமெடுத்து கொத்தித்தின்ன காத்திருக்கும் பிரச்சனைகள் இங்கு ஏராளம். ஒரு சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் மென்மனம் கொண்டவர்களே இம்முடிவின் பின்னே முகமூடிகளுடனேயே பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இரை தேடும் புலியாய் பிரச்சனைகள் இவர்களை விடாமல் ஒடஓட துரத்துகிறபோது, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் மயங்கிய மானாய் அந்த பிரச்சனைகளுக்கே இரையாகி, விடுதலையென நினைத்து மரணச் சிறைக்குள் மண்டியிட்டு மெளனமாகி விடுகின்றனர்.
பொதுவாக மரணம் நோக்கிய முடிவில், தனி மனிதனுடைய கடைசி பிரச்னையின் ஒரு துளியை மட்டுமே உலகம் அறியும். வெளியில் தெரியாத வேறு பல பிரச்சனைகளும், புறஉலகம் அறியாத ஊறுவிளைவிக்கும் உளவியல் சிக்கல்களும் தன் ஆக்டோபஸ் கரங்களால் அவனை இறுக்கி அனைத்து இல்லாமல் செய்து விடுகின்றன என்பது குரூரம் நிறைந்த கொடூரம். இதற்கு தீர்வுதான் என்ன?.
நமக்குள்ளும், நம்மை சுற்றியுள்ள மனிதர்களுக்குள்ளும் உறங்கும் உணர்வாய் இருக்கும் ‘தற்கொலை’ எண்ணத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி, உள்ளுக்குள் அவர்களை உருக்குலைத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை ஒளித்து வைக்காமல் வெளிக்கொண்டு வருவதுதான். மனம் சுமந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் எதுவும் நம்மை ஒருநாள் கொன்று தின்றுவிடும் கொடூர குணம் கொண்ட ராட்சஷ பிசாசு என்பதை நினைவிற் கொள்வது நல்லது.
நேசிக்கும் ஒரு உறவோ, நம்பிக்கைக்குரிய நட்போ அல்லது நிந்தனை செய்யாத யாரோ? இல்லை இவர்கள் யாருமின்றி ஆண்டவன் போன்ற ஆத்மார்த்த நம்பிக்கையோ உங்களின் மனபாரம் குறைக்கும் மருந்தாக இருக்கும் எதுவும் ஏற்புடையதே. மனம் திறந்து பேசுங்கள், இன்று இமயமாய் எழுந்துநின்று பயமுறுத்தும் எல்லா பிரச்சனைகளுமே கடந்து சென்றபின் திரும்பப் பார்த்தால் ‘காலுக்கடியில் கிடக்கும் வெறும் குப்பை’ என்பதே உண்மை.
தோள்தொடும் தோழனோ, தொட்டணைத்துக்கொள்ளும் உறவோ இல்லை மனதோடு உறவாடும் இறை நம்பிக்கையோ, நேர்வழியில் உறவாடும்
எதுவானால் என்ன? உங்கள் மனக்காயங்களுக்கு மருந்திடும் எதுவும் உங்களின் தற்கொலை எண்ணத்தை தலையில்தட்டி துரத்திவிடும் வல்லமை கொண்டவை. உங்களைச் சுற்றி உலவும் உளவியல் சிக்கலில் மாட்டிக்கொண்ட மனித முகங்களை படியுங்கள், மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒருவேளை நாளை அவர்களை கடினமான முடிவிலிருந்து காப்பாற்றிய கடவுளாகவும்கூட நீங்கள் இருக்கலாம்.
- சதா. செந்தில்