சினிமா

பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

38views
சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.
ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது…
ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்
பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ட்ராக் மியூசிக் நிறுவனம் சமீபத்தில் இதன் பாடல்களை வெளியிட்டது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி-27லிலும் டிரைலர் மார்ச்-2லும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் மார்ச்-13ஆம் தேதி ‘போலீஸ் ஃபேமிலி’ தமிழகமெங்கும் திரையராங்குகளில் வெளியாக இருக்கிறது..
‘போலீஸ் ஃபேமிலி’ படம் குறித்து தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான மலைச்சாமி ராஜா கூறும்போது, “சாத்தான்குளம் மற்றும் சமீபத்தில் சிவகங்கை போன்ற இடங்களில் நடந்த லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் இந்த லாக்கப் மரணங்கள் எத்தனை குடும்பங்களை பழி வாங்குகிறது என்பதையும், மன்னிக்கும் மனம் கொண்ட ஒருவரால் அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடன் சொல்லி இருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பை நான்கு விதமான இடங்களில் வெவ்வேறு விதமான தட்பவெப்ப நிலையில் நடத்தினோம். கடல் பகுதியிலும் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதியிலும் மதுரை போன்ற சமநிலை பரப்பிலும் என வெவ்வேறு விதமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
இதில் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது கடலின் சீற்றத்தையும் நாங்கள் எதிர்கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். அதேபோல கொடைக்கானலிடம் கடும் குளிர், பனிப்பொழிவு, மேகமூட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு இதுவரை கேமரா செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று பல சவால்களுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இசை ; ஜெயா கே.தாஸ்
ஒளிப்பதிவு ; ஜெயக்குமார்
படத்தொகுப்பு ; எம்.எஸ் செல்வா
சண்டைக்காட்சிகள் ; டிராகன் ஜிரோஷ்
பாடல்கள் ; கே.மகாமுனி, சோ.பா மணி, வசந்த்
ஒப்பனை ; வினோத்
மக்கள் தொடர்பு ; A..ஜான்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!