கட்டுரை

ஞாபகம் வருதே – ஞாபகம் வருதே…

317views

ஞாபகம் வருதே – ஞாபகம் வருதே…

 

பால்குடி மறந்த பிள்ளைப் பிராயத்தில் துவங்கி, பள்ளிப் பருவம் முடிகிற வரையில் அனைவருக்கும் ரோல் மாடல் என்றால் அது அவரவர் அப்பாவாகத்தான் இருப்பார்கள். நடை, உடை, பாவனைகள் துவங்கி, உணவுப் பழக்கம் வரை அப்பாவினால் அறிமுகப்படுத்துவது சட்டென்று ஒட்டிக் கொள்ளும். ரசனைகளும் அப்படித்தான். அப்பாவுக்குப் பிடித்த ரேடியோ நிலையம், அப்பாவுக்குப் பிடித்த சினிமாக் கதாநாயகன், அப்பா விரும்பி வாசிக்கும் பத்திரிகை எல்லாமே நமக்கும் பிடித்ததாக இருக்கும். பின்னாளில் ரசனை மாற்றங்கள் வருவதெல்லாம் இயல்பானவை என்றாலும் அடிப்படையில் பதிந்த அவை மாறாதவைதான் என்றும்.

என்வரையில் இந்த அனுபவம் அச்சுப்பிசகாமல் நடந்தது. அப்பாவைப் போலவே சாப்பிடும் நேரத்திலும் புத்தகம் படிப்பது (அப்ஃகோர்ஸ், அதற்காக அடிவாங்குவதும்கூட), அப்பாவுக்குப் பிடித்த ஹீரோ எம்ஜிஆர் என்று அனைத்துமே பள்ளிப் பருவத்தில் என்னிடமும் ஒட்டிக் கொண்டவை. எம்ஜிஆரிடம் பிறகு போகலாம். இப்போது முதலில் அப்பா.

என் அப்பாவிற்குப் படிப்புக் குறைவுதான் என்றாலும் திடமான கொள்கை இருந்தது. ‘இன்னொருத்தன்கிட்ட கைகட்டி வேலை செய்யறதெல்லாம் ஒரு பிழைப்பா.?’ என்பதே அது. எனவே, சொந்தத் தொழில் செய்தார். மாவு மில்! சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இன்றுபோல் அன்று வீட்டுக்கு வீடு கிரைண்டர் இல்லாததால் சிறப்பாக வியாபாரம் ஆகும். தினம் கடையை அடைத்துவிட்டு அவர் வீட்டுக்கு வரவே இரவு எட்டு மணி ஆகும். இப்படியான வாழ்க்கை முறை என்பதால் சினிமா பார்க்க எங்களை அழைத்துப் போவதென்றால் இரவுக் காட்சியாக மட்டுமே அமையும்.

அப்போது நாங்கள் வசித்தது மதுரையில். எம்ஜிஆரின் புதிய படம் ரிலீசானால் நிச்சயம் அப்பா உடனே அழைத்துப் போவார். நாங்கள் இருந்த வீட்டுக்கு மிக அருகிலேயே நடக்கும் தூரத்தில் தேவி தியேட்டர் இருந்தது. அங்கே எந்த எம்ஜிஆர் படமும் ரிலீசாகி விடக் கூடாதே என்பதே என் வேண்டுதலாக இருக்கும். ஏன்..?

தொலைவிலிருக்கும் தியேட்டர் என்றால் அப்பா குதிரை வண்டியில் அழைத்துப் போவார். இன்றையத் தேதியில் வளரும் பிள்ளைகளாக இருப்பவர்களுக்கும், ஏன்… சில வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் என்பது வாய்த்திருக்காத, இனியும் வாய்க்கப் போகாத விஷயம். இயந்திரக் குதிரைகள் ஓடத் துவங்கிய இன்றைய நாளில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்துதான் போய்விட்டன.

குதிரை வண்டி வந்தால் முதலாவதாகத் தாவியேறி, வண்டிக்காரரின் அருகில் சீட் பிடித்துவிடுவேன் நான். வண்டிக்காரனின் சாட்டையடி பட்டதும், உடலதிர அது ஓடுகிற ஓட்டத்தில் லொடக் லொடக்கென்று இருபுறமும் மெலிதாகச் சாய்ந்தபடி போகும் அந்தக் கூண்டு வண்டியில் முன்னால் அமர்ந்து, பட்டை கட்டிய குதிரையின் கண்களையும், ஓடுகிற அதன் உடல் அசைவுகளையும் பார்ப்பதில் அத்தனை ஆசை எனக்கு. முடிந்தால் வண்டிக்காரன் பார்க்காத சமயம் அதன் வாலைத் தொட்டுப் பார்ப்பேன். வண்டியின் ஓட்டத்தில் முன்பின்னாக அலைந்து அது கையில் மோதுகையில் ஒருவித இனந்தெரியா குஷி. வண்டிக்காரர் பார்த்தால், ‘குதிரை மெரண்டுடும் தம்பி, கையத் தள்ளி வை’ என்று திட்டி, கையைத் தள்ளி விடுவார்.

இன்றைய இளந்தலைமுறையினர் அனுபவிக்க முடியாத வழக்கொழிந்து போன மற்றொரு சமாச்சாரமும் அன்றைய தேதியில் இருந்தது. இடைவேளைக்கு முன்னும் பின்னும் கையில் ஒரு ட்ரேயில் பிஸ்கெட், கடலை மிட்டாய், சாக்லெட் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு திரையரங்கின் உள்ளே ஊடாடி விற்பதற்கென்றே சிலரைத் திரையரங்கத்தார் நியமித்திருப்பார்கள். அதிக சத்தமெழுப்பாமல் ரகசியக் குரலில் அவனிடம் பேசி, வேண்டியதைப் பெற்று, அரையிருட்டிலேயே பணத்தை எடுத்துத் தந்து… எப்போது வேண்டுமானாலும் ஸ்னாக்ஸ் வாங்கி, கொறித்தபடியே ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். அப்படிப் பார்த்த படங்களுக்குக் கணக்கேயில்லை. மேக்ஸிமம் எம்ஜிஆர் படங்கள்தான் அப்பாவுடன் பார்ப்பேன் என்று சொன்னேனில்லையா..? அப்படி ஒருசமயம் சிந்தாமணி தியேட்டரில் இரவுக் காட்சி பார்த்த சமயம், எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருந்த ஒரு கனவான், ட்ரேயைச் சுமந்து வந்தவனிடம் ஏதோ கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார். சரியாக அந்த நேரம் பார்த்துத்தானா திரையில் சண்டைக் காட்சி வரவேண்டும்..? வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி பத்துப் பேரை அடிக்க, நான் உற்சாகத்தில் “அப்டி அடிங்க வாத்யாரே..” என்று கையை வீசி துள்ளிக் குதிக்க, என் கை பட்டு, ட்ரே அந்தரத்தில் பறக்க, அதிலிருந்த ஐட்டங்களெல்லாம் முன் சீட், பின் சீட்டில் இருந்தவர்கள் மேல் ஷவராய்ப் பொழிய, ட்ரே வாலா லபோதிபோவென்று கத்த ஆரம்பிக்க… ரகளை! ஏக ரகளை!! பிறகென்ன… கீழே விழுந்த ஐட்டங்களைப் பொறுக்கியபின் தொலைந்துவிட்டது என்று அவன் சொன்ன ஐட்டங்களுக்கான தொகையை அவனுக்குத் தந்து அப்பா அவன் வாயைச் சாத்தினார். அப்ஃகோர்ஸ், என்னையும் முதுகில் சாத்தினார்.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த எம்ஜிஆரை வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது என்னுடைய பெருவிருப்பமாக இருந்தது. ஆனால் விதியின் விளையாட்டினால் என்னுடைய 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழலில் சினிமா பார்ப்பதும் குறைந்து, அந்த ஆசையும் மங்கித்தான் போனது.

ஆனால் 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் என்னுடைய ஆசை நிறைவேறியது. என்ன ஒன்று… நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய நான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைத்தான் இரண்டு முறை அருகில் பார்த்தேன்.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை பார்த்ததும் இன்றும் என் நினைவில் பசுமையாய். சரிசரி…. அதிகம் ஜல்லியடிக்காமல் நான் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த நான் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தேன். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். என் கண்கள் வாசலையே ஆர்வமாகப் பார்த்தபடி இருக்க… அதோ பெருங்கூட்டம் புடைசூழ எம்ஜிஆர்! நான் நின்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. எம்ஜிஆருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் குபீரெனப் பாய்ந்து இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைத் தாங்கி, விழாமல் தடுத்து நிறுத்தினார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் வாய்பிளந்து பார்த்தேன் நான். அன்று எம்ஜிஆர் மேடையில் பேசியது ஒரு வரிகூட என் நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இரண்டாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்களைக் கட்டணம் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் எம்ஜிஆர். அப்படி மதுரைக் கல்லூரியில் ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்’ நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனேன் நான். (நாடகம் என்ற வடிவத்தை நான் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை).

அதற்கடுத்த தினம் அதே மதுரைக் கல்லூரி மேடையில் மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்’ நாடகம் நடந்தது. நானும் என் சித்தப்பாவும் (சித்தி அங்கே விரிவுரையாளர் என்பதால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்தோம். ஆமாம்… சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்க்க ஏற்பாடாகியிருந்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்… எம்ஜிஆர் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

முதல் வரிசையில் இருந்தவர்கள் எழுந்து இடம்தர, இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே சிம்பிளாக வாத்யார் அமர… அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன் நான். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் என்னைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே” என்கிற எண்ணத்தை என்னில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே கவனித்தேன்…? எம்ஜிஆரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக அன்று நான் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து எம்ஜிஆரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட எம்ஜிஆர் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனேன் நான். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும், பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் நான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் பார்த்து ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் எனக்கு.

நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல எம்ஜிஆரைப் பார்த்த மகிழ்வு அதன்பின் பல நாட்கள் இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல… உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டேன் நான்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் என் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியேடா… ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸ்ட் அவரை கை குலுக்கியாவது சந்தோஷப்பட்டிருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா மடையா..!” ஹும்…! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்…!

 

  • பாலகணேஷ்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!