கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள்

27views
( பகுதி 2 )
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
சென்ற பகுதியில் நல்ல நிகழ்ச்சிகளில் மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிப் பார்த்தோம்.இந்தப் பகுதியில் துக்க நிகழ்வுகளிலும் சடங்கு சம்பிரதாயங்கள் மாறி வருகிறது என்பதைப் பார்ப்போம். தற்போது எல்லாம் பெற்றோர்களின் இறுதி காலங்களில் பிள்ளைகள் கூட இருப்பதே இல்லை. வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விடுகிறார்கள். வயதான காலத்தில் பெற்றோரை உடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராமல் போனது வியப்பு.
இதில் இரு பக்கமும் பிழை இருக்கலாம். அதை பேசி களைந்து நல்லதோர் முடிவை எடுக்க வேண்டும்.  முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு பெரியவர் மரணித்து விட்டால் 16 நாட்கள் அங்கு துக்கம் அனுசரிப்பார்கள்.  இப்பொழுதெல்லாம் அப்படி ஒரு நிகழ்வு என்றால் வெளியூரில் இருந்து கிளம்பும் போதே ஊருக்கு திரும்புவதற்கும் பயணச்சீட்டை உறுதிப்படுத்திய பிறகே கிளம்புகிறார்கள். ஏனென்றால் விடுமுறை கிடைப்பதில்லை என்ற ஒரு சாக்கு. பெற்றோரை விட வேறு என்ன முக்கியம்?
முன்பெல்லாம் ஒரு பெரியவர் இயற்கை எய்தி விட்டால் அன்றும் மறுநாளும் சடங்குகள், எட்டாம் நாள் பெண் குழந்தைகளின் சடங்குகள், பதினாறாம் நாள் கருமாதி சடங்கு நடைபெறும். ஆனால் இப்பொழுது அன்றே எல்லாம் முடித்து, மறுநாள் பெண் குழந்தைகள் சடங்கும், அதற்கு அடுத்த நாள்…இல்லையெனில் அன்றே 16ஆம் நாள் காரியமும் முடித்துவிட்டு ஊருக்கும் கிளம்பி விடுகிறார்கள். நன்கு வயதானவர்கள் என்றால் பதினாறாம் நாள் தான் காரியம் செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் இன்றோ…?

இதாவது பரவாயில்லை…சிலர் வரமுடியாத படி வெளிநாடுகளில் இருக்கிறார்கள். செய்ய வேண்டிய இறுதி காரியம் கூட செய்ய முடியாமல் போகிறது. யாரோ செய்கிறார்! ஒரு மனிதப் பிறப்பிற்கு இரண்டே இரண்டு கடமைகள் தான் இருக்கிறது. ஒன்று…தன் பெற்றோருக்கு நாம் ஈமச்சடங்குகள் செய்வது.

இரண்டாவது தன் பிள்ளைகள் கையினால் ஈமைச் சடங்கை பெறுவது. இந்த காலத்தில் அதற்கு சாத்தியம் இருக்கிறதா? இதை எழுதத்தான் வேண்டுமா என்றால்… நாம் பணம் பணம் என்று பணம் பின்னால் ஓடிக்கொண்டு நமது சம்பிரதாயங்களை மறக்கிறோமே !அதனால் சொல்லித்தான் ஆக வேண்டி உள்ளது. பணம் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர வேண்டும்.
எனவே நமது சமுதாய சமுதாய சடங்குகளுக்கு உரிய மரியாதை குறைந்தபட்சமாகவாவது வழங்கி நம் பெருமை காப்போம்.
( தொடர்ந்து பயணிப்போம் )

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!