சினிமா

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு

62views
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தீபக் குமாரும், படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது…
“இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். இப்படத்தின் டீம் மிகவும் அருமையான டீம். இன்றைய காலகட்டத்தில் அழ வைப்பதும் உணர்ச்சிவசப்பட வைப்பதும் மிகவும் சுலபம், ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது கடினம். ஆனால் இந்த கலையில் சந்தானம் சிறந்து விளங்குகிறார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை நான் பார்க்கும் போது பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்தேன். ரசிகர்களும் அதே போல சிரித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”
பாடலாசிரியர் துரை பேசியதாவது…
“இசையமைப்பாளர் ஆஃப்ரோவும் நானும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி உள்ளோம். இப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.”
ஒளிப்பதிவாளர் தீபக் பேசியதாவது…
“சந்தானம் அவர்களுடன் இது எனக்கு நான்காவது படம். அவருடன் பணிபுரிவது குதூகலமான அனுபவம். நகைச்சுவை என்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் இப்படக்குழு அதை சாதித்து இருக்கிறது. பேயுடன் கேம் விளையாடுவது தான் படத்தின் மையக்கரு, படத்தை பார்ப்பவர்களும் தாங்களும் இதை விளையாடுவது போல் உணர்வார்கள். மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குநர் பிரேம் ஆனந்த் வடிவமைத்துள்ளார்.”
இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசியதாவது…
“சுயாதீன இசைக்கலைஞரான நான் தற்போது திரைப்பட இசையமைப்பாளராக மாறி உள்ளேன். ஆல்பங்களுக்கு இசையமைப்பது சற்றே எளிது, ஏனென்றால் விதிகள் எதையும் பெரிதாக பின்பற்ற தேவையில்லை. ஆனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது சூழலுக்கு ஏற்ப இசையமைக்க வேண்டும், அது கொஞ்சம் சவாலான விஷயம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த், தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சேது ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.”
சண்டை பயிற்சியாளர் ஹரி பேசியதாவது…
“சந்தானம் அவர்களுடன் இது எனக்கு 12வது திரைப்படம். இப்படத்தில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் சண்டை காட்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ஜாலியாக இருக்கும்.”
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் பேசியதாவது…
“இந்த வாய்ப்புக்காக சந்தானம் மற்றும் இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பேய் படமாக இது இருக்கும்.”
கலை இயக்குநர் மோகன் பேசியதாவது…
“‘டிடி ரிடர்ன்ஸ்’ முழுக்க முழுக்க செட்களிலேயே எடுக்கப்பட்ட படம். எனவே எனக்கு நிறைய வேலை இருந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக பிரமாண்டமான அரங்கங்களை படத்துக்காக அமைத்தோம். இயக்குநர் ஒவ்வொன்றையும் தெளிவாக திட்டமிட்டு எங்களிடம் வேலை வாங்கினார். இப்படம் தொடங்கியது முதல் முடிவு வரை சிரிப்பு மழையாக ரசிகர்களை மகிழ்விக்கும்.”
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது…
“தான் மட்டும் இல்லாமல் தன் குழுவினரும் வளர வேண்டும் என்று சந்தானம் அவர்கள் நினைப்பார். நானும் அக்குழுவை சேர்ந்தவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நகைச்சுவை நிறைந்த திரைப்படம் இது, டிடி ரிட்டர்ன்ஸ் போன்று இன்னும் பல திரைப்படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும்.”
பெப்சி செயலாளர் சுவாமிநாதன் பேசியதாவது…
“பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் மிக அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுத்து உள்ளார்கள். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து மிகவும் மகிழ்ச்சி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.”
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…
“சந்தானமும் நானும் 25 வருடங்களாக நண்பர்கள். இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.”
நடிகை மசூம் ஷங்கர் பேசியதாவது…
“இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. சந்தானம் மிகவும் திறமை வாய்ந்த நடிகர். இயக்குநர் பிரேம் ஆனந்த் திறம்பட திரைக்கதை அமைத்து அதை படமாக்கியுள்ளார். இப்படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
குழந்தை நட்சத்திரம் மானஸ்வி பேசியதாவது…
“சந்தானம் அங்கிள், இயக்குநர் பிரேம் ஆனந்த் அங்கிள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். பிரேக் சமயங்களில் விளையாடிக் கொண்டிருப்போம். அனைவரும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளோம்.”
நடிகர் பிபின் பேசியதாவது…
“இந்த படத்தின் நகைச்சுவை மிகவும் பேசப்படும். எனக்கும் முனீஷ்காந்துக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தும். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள்.”
நடிகர் சாய் தீனா பேசியதாவது…
“சந்தானம் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் சினிமாவை தாண்டி மனிதநேயம் அதிகம் கொண்டவர் அவர். அவரும் இயக்குநர் பிரேம் ஆனந்தும் சேர்ந்து இப்படத்தில் நகைச்சுவை விருந்து படைத்துள்ளார்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”
நடிகர் சேது பேசியதாவது…
“நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்கள், இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய படம். காணத்தவறாதீர்கள்.”
நடிகர் தங்கதுரை பேசியதாவது…
“சந்தானம் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார், மிக்க நன்றி. இப்படத்தில் அவர் கோஸ்டை ரோஸ்ட் செய்துள்ளார். நீங்கள் அனைவரும் இப்படத்தை ரசித்து மகிழ்வீர்கள்.”
நடிகர் மாறன் பேசியதாவது…
“இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், ஒவ்வொரு சீனுக்கும் அவ்வளவு பணியாற்ற வேண்டியதிருந்தது, அது குறித்து விரிவாக திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசுவோம், நன்றி.”
நடிகர் பெப்சி விஜயன் பேசியதாவது…
“இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை மீண்டும் மீண்டும் திரையரங்குகளை காண்பதற்காக அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் கேட்பார்கள். இதை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.”
நடிகை சுரபி பேசியதாவது…
“இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் பேய் காமெடி படத்தில் இப்போது தான் முதல் முறையாக நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி.”
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசியதாவது…
“இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும் ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.”
நடிகர் சந்தானம் பேசியதாவது…
“நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடி ரிட்டர்ன்சை’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து, பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!