சென்னை: சென்னையில் இருந்து துவக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை, 7:50 மணிக்கு, டில்லியில் இருந்து, விமானப்படை விமானத்தில், காலை, 10:35க்கு, சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து, எம்.ஐ., – 17 ஹெலிகாப்டரில், அடையாறு, ஐ.என்.எஸ்., கடற்படை தளம் சென்றார். காலை, 11:05க்கு, அங்கிருந்து காரில் சாலை வழியாக, அரசு விழா நடந்த, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கிற்கு சென்றார். அங்கு, அர்ஜுன் எம்.பி.டி., – எம்.கே.ஐ.ஏ., ரக கவச வாகனத்தை, பார்வையிட்டார். பீரங்கியின் சிறப்புகள் குறித்து அதிகாரிகள், மோடிக்கு விளக்கினர்.
இதன் பின்னர், பிரதமரை, கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர். மேடையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படத்திற்கு மோடி, கவர்னர். முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர், 3,770 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கமான, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை, 9 கிலோ மீட்டர் வழித்தடச் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை, 293.40 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, நான்காவது ரயில் வழித்தடம்; விழுப்புரம் – தஞ்சாவூர் – திருவாரூர் வரை, 423 கோடி ரூபாயில், மின் மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதை ஆகியவற்றையும், அவர் துவக்கி வைத்தார்.
அத்துடன், 2,640 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ள, கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
சென்னை அடுத்த தையூரில், 1,000 கோடி ரூபாயில் அமைய உள்ள, இந்திய தொழில்நுட்ப கழக கண்டுபிடிப்பு வளாகத்திற்கும், அடிக்கல் நாட்டினார்.
ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி., – எம்.கே.ஐ.ஏ., ரக கவச வாகனத்தை, ராணுவத்திடம் பிரதமர் ஒப்படைத்தார்.
பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி பின்னர் நிகழ்ச்சி உரையாற்றினார்.
தனது உரையில் மகாகவி பாரதியாரின் பாடலையும், ஔவையாரின் பாடலையும் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்.