சிறுகதை

கஞ்சிசாதமும் காலி ஃப்ளவர் ஃப்ரையும்

141views

கே.ஜி.ஜவஹர்

“ஏதாவது சொல்லுங்க..என்ன வைக்கட்டும் மதிய சாப்பாட்டிற்கு?” என்றாள் அலமேலு.

“வீட்ல என்ன இருக்கு?’’ என்றான்.

“ நீங்க வெளியில் போய் ஒரு வாரமாகுது…என்னத்த இருக்கும் வீட்ல…? கொஞ்சம் அரிசியும் ஒரு காலிஃப்ளவரும் இருக்கு…நீங்க பக்கோடா போடுன்னு வாங்கிட்டு வந்தீங்க..”

“அட ஆமா…ரொம்ப நாளாச்சே..பக்கோடா போடலையா…?’’

அலமேலு முறைத்தாள்.

“வீட்ல வேலைக்காரி வேறு இல்ல… வேலைய முடிச்சிட்டு அக்கடான்னு படுக்கவே நேரம் பத்தல..இதுல பக்கோடாவேறயா…! மனசுல கொஞ்சமாச்சு ஈவு இரக்கம் இருக்கா..?’’

“ஸாரி..ஸாரி…இருக்கிறத வெச்சு ஏதாவது பண்ணேன்மா…நீதான் ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கிடுவியே..”

மறுபடியும் முறைத்தாள் அலமேலு. ”இதுல ஏதோ உள்குத்து இருக்குறமாதிரி இருக்கே…அப்ப நான் கதை விடறவள்னு சொல்றீங்களா,,?” சொல்லிவிட்டு கால்களை லேசாக அகட்டி நின்று இடது கையை இடுப்பில் மடித்து வைத்து வலது கையால் முந்தானை முனையைச் சொருகினாள்.

சக்தி அதிர்ந்தான்.இது கெட்ட சகுனம். வீம்பைக் காட்ட இது சமயமல்ல. ஹோட்டல் வேறு கிடையாது.

“ அட எனக்கு வேற பழமொழி தெரியலை அல்லு.. நீ ஜமாய்’’

“அப்ப கஞ்சிசாதமும் காலிஃப்ளவர் ஃப்ரையும் பண்ணிடறேன்..”

‘’ஆஹா…கேட்கும்போதே நாவில் எச்சில் ஊறுதே’’ என்று சொல்லிவிட்டு,

மனதிற்குள் ’என்ன தத்துப்பித்து காம்பினேஷனோ..! கஞ்சிக்கு காலிஃப்ளவர்.!. ஒரு பருப்புத்துவையல் சுட்ட அப்பளம் இல்லையா..சே…’ என்று அவளைத் திட்டித் தீர்த்தான்.!

அப்போது அலமேலுவின் செல் ஒலித்தது. அவள் கிச்சனில் இருந்ததால் செல்லை எடுத்துப் பார்த்தான்.

திடுக்கிட்டான்.

சுமதி. அவன் அழகு மைத்துனி. பங்களூருவில் மருத்துவம் இரண்டாம் வருடம்.

அவள் பெயரைப் பார்த்ததுமே ‘திக் திக்’ ஆகி அவன் மனதில் டார்ட்டாய்ஸ் சுருள் எரியத்துவங்கியது. ஒரு சைக்கிள் கடையில் சைக்கிள் வீல் வேகமாக சுற்றத் துவங்கியது. ஒரு குழந்தை வெறுங்காலுடன் நடக்கத் துவங்கி பிறகு செருப்புக்காலுடன் வேகமாக ஓடத் துவங்கியது. ஆம் ஒரு ஃப்ளாஷ் பேக் ஆரம்பம்.

சுமதி ஒரு வெகுளி.அக்கா அலமேலு போல் இல்லாமல் சற்று துறு.துறு. கொஞ்சம் ஃப்ரீயாகப் பழகுவாள். ஹைதராபாத்தில் இருந்த சாரநாதன் ஆறு மாதங்களுக்கு முன் போன் பண்ணினார். ‘மாப்பிள்ளை..சுமதி ஒரு இரண்டு மாதம் அங்க வந்து தங்கிப் படிப்பா…மெடிகல் எக்ஸாம் வருது..எங்களுக்கு அவள வெளியில தங்க வைக்க மனசில்ல…அதனால இந்த யோசனை…”

‘’ஓ..தாரளமா…வரட்டும். மாமா.அத்தைக்கும் நிம்மதியா இருக்கும்…இங்க அக்காவும் தங்கச்சியும் சந்தோஷமா இருப்பாங்க…” என்று சொல்லிவிட அவளும் வந்து விட்டாள். ஆனால் கூடவே வினையும் வந்துவிட்டது.

“யாரைகேட்டு சுமதியை வரச்சொன்னீங்க..’’

“யாரைகேக்கணும்..உன் தங்கச்சிதானே?’’

“அதான பிரச்சனையே…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுமதி வந்துவிட்டாள்.,”மாமா…எனக்கு டூத் பிரஷ் வேணும்..நான் வறேன்னு தெரிஞ்சி எல்லாம் ரெடியா வெச்சிருக்கவேணாம்…முழிக்கிறத பாரு..பேய் முழி..ஆனாலும் இந்த பேய்முழிதான் உங்க அழகே மாமா..” என்றவள் அவன் தலையில் நங்கென்று குட்டிவிட்டுச் சென்றாள். இது போறாதா…அலமேலுவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. அதைச் சமாளிக்க “அவ குழந்தைடி’’ என்றான் அவன். ‘’முதல்ல நம்ம குழந்தை சாதனாவை ஸ்கூலுக்கு கிளப்புற வழியைப் பாருங்க’ என்று கோபமாக கிச்சனுக்குள் போய்விட்டாள்.சுமதி தான் உண்டு தன் கிளாஸ் உண்டு என்றுதான் இருந்தாள்.வீட்டு வேலைகள் பாதி செய்தாள். சாதனாவை சில சமயங்களில் ஸ்கூலுக்கும் கூட்டிப்போனாள்.ஆனாலும் அலமேலு ‘முணு முணு’ என்றே ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.அவ்வப்போது ஹைதராபத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு ஏதோ சுமதியைப் பற்றிப் போட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்தாள். ஆனாலும் ஒன்றும் பெரிதாக மாற்றமில்லை. அவர்களோடது பெரிய வீடு. ஒரு ரூமை சுமதிக்கு என்று தனியாக ஒதுக்கியாயிற்று. ஆனாலும் சுமதி.’மாமா,அக்கா,சாதனா என்று ஹாலில் வந்து சகஜமாக இருக்கக் கூடாதாம். ஒரு நாள் அந்த பூகம்பம் வெடித்தே விட்டது. சாதனா டியூஷனுக்கு சென்றுவிட்டாள்.அலமேலு ‘நாராயணியம்’ வகுப்பிற்கு சென்று இருந்தாள். அன்று சுமதி சீக்கிரமே வகுப்பில் இருந்து வந்தவள் சக்தி கட்டிலில் படுத்து ஏதோ வலியில் முனகிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறினாள்.”என்னாச்சு மாமா” என்று அருகே ஓடினாள்.” யாரு சுமதியா…இரண்டு கண்ணுலயும் குளவிங்க கொட்டிருச்சு.. கண்ணைத் திறக்க முடியல..அலமேலுக்கு போன போடு…’’ அக்காவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..பயப்படுவா..இருங்க மாமா..” என்றவள் கீழே மண்டியிட்டு அமர்ந்து துப்பட்டா முனையைப் பந்தாக்கி வாயில் வைத்து சூடு படுத்தி அவன் முகமருகே குனிந்து ஒத்தடம் கொடுக்கும்போதுதான் சீக்கிரமே கிளாசை விட்டுவந்த அலமேலு வீட்டில் நுழைந்ததும் பின்புறமாக பார்க்க அதிர்ந்து கத்தினாள்.’அடப் பாவி…இப்படி முத்தம் கொடுக்குற அளவுக்கு வந்திட்டயா…ஏங்க..என்ன நடக்குது இங்க..” என்று ஆவேசமாய் கத்தி சுமதியைப் பிடித்து தள்ளி விட்டாள். அன்று அழுது கொண்டே போன சுமதிதான். இனி லைவ்.

பல மாதங்களுக்குப் பிறகு போன்.! பயந்து கொண்டேதான் செல்லை அவளிடம் நீட்டினான் சக்தி.

அலமேலு பேசிவிட்டு இறுக்கமான முகத்துடன் அவனிடம் வந்து,” ஏங்க அப்பா ஏதாவது பேசினாரா” என்றாள்.”இல்லையே அல்லு” என்றான்.

“சுமதிக்கு இங்க போஸ்டிங்க் ஆயிருக்காம்.குவார்டர்ஸ் கிடைக்கிற வரை இங்கு தங்கி இருப்பாளாம்… நேற்றே கிளம்பி விட்டாளாம்…சொல்லிவிட்டு அவன் கண்களையே பார்த்தாள். அவன் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தைப்பார்ப்பதற்கே மனசில்லை.

ஆனால் கடவுள் அவர்கள் வீட்டில் ஒரு கதவை அடைக்கப் போவதையும் அதற்கு மறு கதவாக சுமதியை அனுப்புகிறான் என்றும் யாருக்கும் தெரியவில்லை.

வாசலில் சத்தம். என்ன என்று எட்டிப்பார்த்தான் சக்தி.சிலர் முழு கவசம் மாஸ்குடன் நின்று கொண்டிருந்தார்கள்.

“ஸார் தன்னார்வ குழு சார்..இரத்தப் பரிசோதனை பண்றோம்…பண்ணிகிட்டா நல்லது…’’

“ஓ பண்ணிட்டா போச்சு…ஆனா இங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல”

‘’ புதுசா கருவி வந்திருக்கு…முறைப்படி அனுமதியும் இருக்கு..” என்றார்கள் வந்தவர்கள். சக்திக்கும் அலமேலுவிற்கும் எடுத்தார்கள்.சாதனா மதுரையில் பாட்டி வீட்டில் இருக்கிறாள்.

ஒரு மணி நேரத்தில் அதிச்ச்சி ரிப்போர்ட் வருவதற்கும் சுமதி சூட்கேசுடன் வாசலில் நிற்பதற்கும் சரியாக இருந்தது!

ஆம் அலமேலுவிற்கு ஜுரம். பயத்தில் வெளிறி விட்டாள். சில நிமிடங்களில் அந்த ஏரியாவே பரபரப்பானது. ஒரு ஆம்புலன்ஸ் அவளை ஏற்றிச்சென்றுவிட்டது. எந்த வித அறிகுறியும் இல்லாமல் பரவுகிறது என்று சொன்னார்கள். உண்மைதான். கலங்கிப் போனான் சக்தி. “சுமதி…அவரப் பார்த்துக்கோம்மா…வென்னீர் கூட போடத் தெரியாது அவருக்கு…’ அழுதுகொண்டே ஆம்புலன்சில் ஏறிய அக்காவைப் பார்த்து சுமதியும் கலங்கி விட்டாள்.

ஆனால் மறு நாளே அலமேலு வந்துவிட்டாள். இது முதல் நிலைதான் என்றும் வீட்டில் வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என்றும் தனி அறை தனி டாய்லட் போன்றவைகள் சொல்லி டயட் மருந்து எழுதிக்கொடுத்துவிட்டார்கள். அறையை விட்டு எக்காரணம் கொண்டும் மறு அறிவிப்பு வரும் வரை வெளியே வரக்கூடாதென்றும் சொல்லிவிட்டார்கள்.

சுமதிதான் சாப்பாடு கொடுப்பது எல்லாம். முழுக்கவசம் அணிந்து எட்டத்தில் இருந்து கொடுத்துவிட்டு வருவாள். சக்தி வேறு ஒரு அறையில் தனியாக.

“சுமதி…அவர் எப்படி இருக்கார்டி…பசி தாங்க மாட்டார்டி…ரொம்ம உரைப்பு போட்றாதே…”

“அக்கா…நான் நல்லா கவனிச்சுக்கிறேன் அக்கா…கவலைப்படாதே… அக்கா வீடியோ கால்..! மதுரைப் பாட்டி வீட்டிலிருந்து சாதனா..”

“ஐயோ என் செல்லமே…’’ கலங்கினாள் அலமேலு.

‘’ அம்மா…அப்பா தலைலாம் வெள்ளமுடி…யாரோன்னு நினச்சு ஏமாந்துட்டேன்மா..”

“ நானும் அந்தக் காலத்துல ஏமாந்துட்டேன் கண்ணு…அந்தக் கருகரு முடி டை டா…! இள நரைன்னு சமாளிச்சார் உன் அப்பா…! பிறகு டை அடிச்சுப்பார்…உனக்கு அடையாளம் தெரியும்..சரியா…?’.

சுமதி வீட்டின் சகல பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டதால் சக்திக்கு பிரச்சனை இல்லாமல் போயிற்று.

ஒரு நாள் இரவு..சக்திக்கு போன்.எடுத்தான்.”என்ன அல்லு…”

‘’பேட் வேணுங்க..வீட்ல இல்லன்னு நினக்கிறேன்…மெடிகல் ஷாப் இருக்குமாங்க..?’’

“கடவுளே…கடை இருக்காதே…’’

“சுமதிட்ட கேளுங்க…அவ வேலைலாம் முடிச்சு குளிச்சிட்டானா…அவள வரச்சொல்லாதீங்க..நீங்க அவகிட்ட வாங்கி வந்து கதவ லேசா திறந்து எறிஞ்சிட்டுப் போங்க..எடுத்துக்கறேன்’’..மிகவும் தயக்கமாக இருந்தாலும் அப்படியே செய்தான். அலமேலுவே சொல்லிவிட்டாள்.

இருபத்தி எட்டு நாட்கள் ஓடிவிட்டன. இரண்டு டெஸ்ட்டிலும் நெகடிவ் வந்து விட்டது அலமேலுவிற்கு.

ஒரே சந்தோஷம் எல்லோருக்கும்.

சுமதி கிளம்பி விட்டாள். சக்திக்கு கண்கள் கலங்கிவிட்டன. அவள் அவனுக்கு ஒரு தெய்வமாகத் தெரிந்தாள். இத்தனை நாட்களும் அவள் கடமை கடமை என்று இருந்தாள்.ஒரு ரோபோவைப் போல. முகத்தில் எந்த வித சலனமும் இல்லாதவளாய். இதை அலமேலுவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். சுமதி சூட் கேசை தூக்கியதும் அழுதுவிட்டாள் அலமேலு.

‘’சுமதி…எல்லாம் முடிஞ்சதும் வந்து போய்ட்டு இரும்மா…எங்களுக்கு மாமாவுக்கும் எனக்கும் உன்னத் தேடும்’’ என்றவள்–

‘’சரி சுமதி..! அன்னைக்கு என்னை திடுதிப்பென்று கூட்டிபோய்விட்டார்கள்..போட்டது போட்டபடி கிடந்தது …மாமாவுக்கு என்ன சமைச்சுக் கொடுத்தே..கேட்க மறந்தே போச்சு…”

‘’வேற என்ன…நீ ப்ளான் போட்டிருந்தியாமே… மாமா சொன்னர்…கஞ்சிசாதமும் காலிஃப்ளவர் ஃப்ரையும்தான்…ஐயோ மாமா என்ன ரசனையோ உங்களுக்கு…” என்றவாறே அவன் தலையில் குட்டப் போக–

“ஏய்…ஏய். அவரோட ஐடியா இல்ல..என்னோடது..அவரக் குட்டாதே வலிக்கப்போவுது” என்று அலமேலு சிரித்துக் கொண்டே கத்த….

சக்திக்கு மிகப் பெரிய பாரம் ஒன்று மனதில் இருந்து இறங்கி எங்கோ ஓடி மறைந்தது…!

Right Click & View Source is disabled.

error: Content is protected !!